அத்தி வரதரும் காஞ்சி வைபோகமும்
காஞ்சிபுரம் என்றாலே நம் கண் முன் நிற்பது ஸ்ரீ
வரதராஜ பெருமாளும் கஞ்சி காமாக்ஷி அம்பாளும்தான். இந்த
இடத்திற்க்கு பெயரே “வைகுண்டபதி”
என்றும் உண்டாம். ஏன் இருக்க கூடாது?
இங்குதானே வரதராஜ பெருமாளையும் படி தாண்டா பத்தினி பெருந்தேவி நாச்சியாரையும்
ஒன்றாக சேவிக்க முடியும். சக்தி மிகுந்த காமாக்ஷி
அம்பாளும் இங்கிருந்து நமக்கு அளவில்லா, ஈடில்லா அருள்பாலித்துக்
கொண்டிருக்கின்றார். காஞ்சியம்பதியை சுற்றி வந்தாலே போதும். யதோத்தகாரி அல்லது சொன்ன வண்ணம் செய்த
பெருமாள், பாண்டவ தூத பெருமாள், பச்சை வண்ணன், பவள வண்ணன், மஹா தேசிகர் சன்னதி
மற்றும் காஞ்சியிற்கே என்றும் செழிப்பை வாரி வழங்கும் குபேரன் கோவில் என்று
எண்ணற்ற பாடல் பெற்ற ஸ்தலங்களை பெருமையுடன் சுமந்து கொண்டிருக்கும் ஊராகும் இது.
இதையெல்லாம் விட, 2019 ஜூலை மாதம்
பொன்னேடுகளில் பொறிக்கப் பட வேண்டிய மாதமாகும்.
ஏனெனில், இந்த வருடம்தான் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளி கொணரப்படும் மாதமாகும். பண்டைய காலத்தில் முகலாய மன்னர்கள் நம்
நாட்டின் மேல் படையெடுத்து, சூறையாடி, கோவில்கள் யாவையும் தவிடு பொடியாக்கி
அங்குள்ள பொக்கிஷங்களான சுவாமி சிலைகளை கொள்ளையடித்து கொண்டுப் போன கால
கட்டத்தில், அத்தி வரதரை காப்பாற்ற எண்ணி அன்றைய பட்டர்களும் மக்களும் சேர்ந்து
அவரை அனந்தசரஸ் குளத்தில் புதைத்தார்கள் என்று வரலாறு கூறுகின்றது.
வருடங்கள் உருண்டோடின. பின்னர், கோவில் அதிகாரிகளும் நிர்வாகிகளும்
சேர்ந்து, 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளிகொணர்ந்து மக்கள் தரிசனத்திற்கு வைப்பது
வழக்கமாகியது. இந்த வருடம் 2019 இந்த வழக்கத்திற்குட்பட்டு 1979ஆம் ஆண்டிற்கு பின்
40 வருடங்கள் கழித்து வரும் வருடமானது.
காஞ்சிபுரத்தின் மற்றொரு பெயர் “ஆத்திகிரி”
ஆகும். எனவேதான் பெருமாளுக்கு அத்தி வரதர்
என்று பெயர் என்றும் ஒரு கூற்றுள்ளது. அது
மட்டுமின்றி, இக்கோவிலை சுற்றி அத்தி மரங்கள் சூழ்ந்திருந்ததாலும் அவருக்கு இந்த
பெயர் விளங்கியது என்றும் ஒரு கூற்றுள்ளது.
அத்திவரதர் என்னும் பெருமாள் ஒன்பதடி உயரம் கொண்ட அத்தி மரத்தாலான
பெருமாளாவார். சரஸ்வதி தாயார் தன் பதி
ப்ரம்மாவுடன் சண்டையிட்டு அவருடைய மந்திரக்கோலை கோபத்தால் அபகரித்தார் என்றும்,
அதை மீண்டும் பெற ப்ரம்மா காஞ்சியம்பதியின் அத்திகிரியில் அஸ்வமேத யாகம் செய்தார்
என்பதும் வரலாறு. அசுரர்களையும் ராக்ஷசர்களையும் துணை கொண்டு, சரஸ்வதி தாயார்
வேகவதி நதியாக உருவெடுத்து ப்ரம்மாவின் யாகத்தை கலைக்க முற்படுகின்றார். ஆயின், விஷ்ணு யாக அக்னியிலிருந்து எழுந்து
சரஸ்வதி தாயாரின் கோபத்தை கலைத்து, யாகத்தை தொடர உதவுகின்றார். முனி விஷ்வகர்மா அவர்கள் அத்திவரதரை அத்தி மரத்திலிருந்து
வடித்தவுடன், பெருமாள் காஞ்சியம்பதியிலேயே யானை மலை மேல் இருந்து தரிசனம் தர
விழைகின்றார்.
நாத்திகர்களுக்கு இது ஒரு கேலி கூத்தாகக் கூட
தெரியலாம். ஆனால் ஜூலை மாதம் 2019 முதல்
காஞ்சியம்பதியில் நடக்கும் வைபவத்தை காண்பவர்களுக்கே புரியும் அதன் வலிமையும்,
சக்தியும். ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும்
இவ்வத்திவரதரை பற்றி பெரிதாக எதுவும் கூறவில்லை.
இந்த அத்தி வரதர் பண்டைய காலத்தில் எங்கோ பிண்ணமாகி விட்டார் என்றும்,
அதனால்தான் ஆகம விதிகளின்படி அவர் குளத்திற்குள் வைக்கப் பட்டார் என்பது இதை
பற்றிய இன்னொரு கூற்றாகும்.
“ஆத்தி வரதர் முகலாய படையெடுப்பின் காரணமாகவோ
அல்லது ஆகம விதிப்படியோ பல வருடங்களாக நீரில் கிடந்திருந்தாலும், அது இப்பொழுது
ஒரு 40 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு வைபவமாகவே நின்று விட்டது”
என்கின்றார் கோவிலுக்கு அருகில் வசிக்கும் அக்கரகனி
ஸ்ரீனிதி என்கின்ற வைணவ மூதறிஞர்.
இந்த வைபவமானது 48 நாட்களுக்கு நடை
பெற்றது. வரதர் கிடந்த திருக்கோலத்தில்
முதல் 40 நாட்களும் (ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 9 வரை)
நின்ற திருக்கோலத்தில் கடைசி 8
நாட்களும் (ஆகஸ்ட் 10 முதல் 18 வரை) யாவருக்கும் சேர்வை சாதித்தார்.
காஞ்சிபுரத்தில் குடியிருப்பவர்களை தவிற வெளி
மனிதர்களுக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை சேர்வை னேரம் ஒதுக்கப்
பட்டிருந்தது. காஞ்சிபுரத்தினருக்கு
மட்டும் மாலை தரிசனம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப் பட்டிருந்தது. எனவே, ஆன்லைன் டிக்கட்டுகளோ அல்லது கோவிலிலேயே
வாங்கிய டிக்கட்டுகளோ (விலை ரூ.50 – 500 வரை) சகிதம் நீண்ட நெடும் வரிசைகளில்
பொருமையாக நின்று தரிசனம் நடை பெற்றது.
இந்த வைபவத்தில் மேலோங்கி தனித்து நின்றது
நம் தமிழக அரசின் முறையான திட்டமிட்ட உழைப்பும் அதை அழகாக அமைத்து சென்ற
விதமும்தான். இந்த விழாவின்
ஏற்பாட்டிற்காக ரூபாய் 29 கோடிகள் ஒதுக்கியது மட்டுமல்லாமல், நம் அரசு இடைவிடாத
ஷட்டில் சேவையையும் பேருந்து நிலையத்திலிருந்து டவுனிற்குள் வரும் வரைக்கும்
ஏற்பாடு செய்து மக்களுக்கு பேருதவி புரிந்தது.
என் கணவரும் நானும் அருள்மிகு அத்தி வரதரை
தரிசிக்க 2019 ஜூலை 13ஆம் நாள் சென்றிருந்தோம்.
சேவார்த்திகளின் வசதிக்காக தமிழக அரசு செய்திருந்த அத்தனை ஏற்பாடுகளையும்
என் கண்ணாரப் பார்த்தும் ப்ரமித்தும் போனேன்.
ஷட்டில் சேவை முடியுமிடத்திலிருந்து தரிசன மண்டபம் வரை மக்களை
வெயிலிலிருந்து காப்பதற்காக அமைக்கப் பட்ட பந்தல்களும் ஷாமியானாக்களும் தெரிந்தன.
நீண்ட வரிசைகளில் பத்தடிக்கு ஒரு சேவார்த்தி மக்களுக்கு தாகம் தீர்க்க நீரும், இன்னொருவர்
மோரும் இன்னும் ஒருவர் உணவும் வழங்கிய வண்ணம் இருந்தனர். பந்தல்களுக்கு எதிர்புறம் வரிசையாக பெட்டி
கடைகள் ஜூஸ்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் விற்றபடி
இருந்தன. வாழ்க்கை ஆசையே அத்தி வரதரை
தரிசிக்க வேண்டும் என்றிருந்த முதியோருக்கும் பக்தர்களுக்கும் தாகத்தையும்
பசியையும் தனிக்க அரசு செய்திருந்த இவ்வசதிகள் மிகவும் உதவியாக இருந்தன.
இதை தவிற நான் முக்கியமாக குறிப்பிட வேண்டிய
ஒன்று அங்கு இரண்டு படுக்கைகளுடனும், மருத்துவர்களுடனும், நர்சுகளுடனும் தயார்
நிலையில் இருந்த அம்மா மருத்துவ முகாம்தான்.
எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல், அப்படி பிரச்சினைகள் வந்தாலும் திறம்பட
சமாளிக்கும் சாமர்த்தியம் கொண்ட முகாமை காணும்போதே பெருமையாக இருந்தது.
அதே போல், சக்கர நாற்காலி வசதியும் தடையின்றி
ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக ஒரு
தனி வழியே வகுக்கப் பட்டிருந்தது. ஒரு
வயது முதிர்ந்த பெண் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வரதைரை காண முடியாமல்
திண்டாடியதை பார்த்த நான்கு காவலர்கள் அவர்களுடைய சக்கர நாற்காலியை அப்படியே
அலக்காக உயர்த்தி அந்த பெண்ணின் விருப்பத்தை பூர்த்தி செய்தனர். அத்துடன் நிறுத்தாமல், அவரை மிகவும்
பாதுகாப்பாக இறக்கி அவருடைய குடிம்பத்தாரிடம் பத்திரமாக ஒப்படைத்த பின்னரே
ஓய்ந்தனர்.
தமிழக அரசு முதியவர்களும்
முடியாதவர்களும் ஓய்வெடுக்கவும் இடங்கள் தயார் செய்திருந்தது. மேலும், தற்காலிக கழிவறைகளும் ஏற்பாடு செய்யப்
பட்டு, அவைகளை சுத்தமாக வைக்க ஆட்களும் நியமணம் செய்திருந்தது. அதே போல், எங்கும்
நீர் வழங்கிகளும் பொருத்தப் பட்டிருந்தன.
இங்கு நாங்கள் இரு வகையான அபூர்வ குணங்களை
காஞ்சி வாசிகளிடம் அன்று கண்டோம்.
அவர்களுடைய தாராளமாக மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் கண்டோம். அத்தி
வரதர் முன்னே அவர்களின் அபார பக்தியையும் கண்டோம். அசந்தோம்.
காஞ்சியிலிருந்து திரும்பும் பொழுது
முழுவதுமே எங்களின் மனத்தில் காஞ்சி மக்களின் அன்பும் அரவணைக்கும் தன்மையும்தான்
மேலோங்கி நின்றது.
“மக்கள்
சேவை மகேசன் சேவை” என்பதற்கேற்ப செயல் பட்ட காஞ்சி மக்களுக்கும் நம் தமிழக அரசிர்க்கும்
என்றும் எல்லோரும் கடமை பட்டிருக்கின்றோம். அவர்களுக்கு நமது பாராட்டுக்களும்
வணக்கங்களும் உரித்தாகுக.
சிறப்பு.
ReplyDeleteமிக அருமை....
ReplyDeleteஅத்தி வரதர் வைபவத்தை மீண்டும் வாசிக்கும் போது மிக மகிழ்ச்சி....
நாங்களும் இவரை நேரில் சென்று தரிக்கும் பாக்கியம் பெற்றோம்...
அப்பொழுது காமாட்சி அம்மன், உலகளந்த பெருமாள் தரிசனங்களும் கிட்டியது..