தமிழக பட்ஜெட்டும்
அதன் பண்முனை அம்சங்களும்
“கலங்காது கண்ட
வினைக் கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்”.
தூக்கங் கடிந்து செயல்”.
மு.வரதராசனார் அவர்களின்
விளக்கத்தில் :
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றுத் தொழிலைச்
சோர்வு கொள்ளாமல் காலந்தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதேயாகும்.
இதுவே ஒரு நிதியமைச்சரின் தலையாய கடமையாகும். இந்த 2020
தமிழக பட்ஜெட் மூலமாக நம் நிதியமைச்சர் தமிழகத்திற்கு என்ன வழங்கியிருக்கின்றார்
என்பதை ஒரு சிறு கண்ணோட்டமாக வரைய முற்படுகின்றேன்.
இந்த பட்ஜெட்டில் வரவு செலவு மதிப்பீடு பின்
வருமாறு :
(ரூபாய்கோடியில்)
வரவுகள் : 2,19,375.14
செலவுகள் : 2,40,992.78
பற்றாக்குறை : 21,617.64
கடன்கள் : 4,56,660.99
சொந்தவரி
வருவாய் : 1,33,530.30
இந்த 2020-21 ஆண்டுக்கான நிதி நிலை
அறிக்கையில் கல்வி, வேளாண்மைத் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளது. கல்விக்கு ரூ.39.233 கோடி ஒதுக்கப்
பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி
கல்வித்துறைக்கு ரூ.34 ஆயிரத்து 181 கோடியை ஒதுக்கி நடப்பில் உள்ள திட்டங்களை தொடர
வழி வகுத்திருக்கின்றது.
இது மிக மிக வரவேற்கத் தக்க ஒரு
ஒதுக்கீடாகும். பள்ளி மாணவர்களின்
முன்னேற்றமும் வெற்றியும் சிறப்பான கல்வியிலும் அதை செவ்வனே கற்பிப்பதிலுமே
இருக்கின்றது. இந்த ஒதுக்கீட்டால், இந்த
கிளையே ஒரு உச்சத்தைத் தொடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் அந்த
துறைக்கு ரூ.11,894.48 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மற்றொரு கண்ணைச் சுண்டி இழுக்கும் ஒதுக்கீடு
பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் அரசும் பேருந்துகள் அனைத்திலும்
சி.சி. டிவி கேமரா பொருத்தப் படுவதாகும்.
நல்ல தீர்க தரிசனத்துடன் எடுக்கப் பட்ட முடிவென்பதில் எந்த ஐயமுமில்லை.
37 மாவட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள்,
திருநெல்வேலி மாவட்டத்தில் உணவு பூங்கா, மூன்று மீன் பிடி துறைமுகங்கள்,
பொன்னேரியில் மாபெரும் தொழில் பூங்கா என்று பல முக்கிய அம்சங்கள் இந்த நிதி நிலை
அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
மாமல்லபுரம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த
ரூ.563 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த
ஒதுக்கீடு நம் தமிழகத்தை ஒரு மேன்மை மிகு சுற்றுலா தலமாக்கும் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை.
வாடகை
ஒப்பந்தங்களுக்கான முத்திரை தாள் வரி 1%லிருந்து 0.25% வரை குறைக்கப் படும் என்று
அறிவிக்கப் பட்டுள்ளது.
உழவர்–அலுவலர் தொடர்பு திட்டம் மிக விரைவில்
செயலாக்கப் படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பணி புரியும்
பெண்களின் நலன் கருதி சென்னையில் 8 இடங்களிலும் கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர்,
காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் மகளிர் நல விடுதிகள் அமைக்கப் படும் என்நும்
அறிக்கையும் வரவேற்கத் தக்கது.
ராமநாதபுரம்,
விழுப்புரம் மாவட்டங்களி ரூ.3,014 கோடியில் இரண்டு கடல் நீர் சுத்த்கரிப்பு
நிலையங்கள் அமைக்கப் படும் என்ற அறிக்கை பல விவசாயிகள் மற்றும் குடி மக்களிடையே
குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கும்.
கீழடி
அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப் பெற்ற பொருள்களை காட்சிப் படுத்துவதற்கான உலகத்
தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ் வைப்பகம் அமைத்திட ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இந்த அரசின் ஆணை நம் தமிழகத்தின் பெருமைகளுக்கும் அகழ்வாராய்ச்சிக்கும் ஒரு உந்துதலை
ஏற்படுத்தும்.
தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ. 74.08
கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார். இது ஒரு தொலை தூரப்
பார்வை பொருந்திய அறிக்கை. அனைத்து தமிழ் விரும்பிகளின்
பேராசிரியர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமான ஒன்றாக இருக்கும்.
நீர் பாசன திட்டப் பணிகளை மேற்மொள்வதற்காக
ரூ. 6,992 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில்,
குடிமராமத்து பணிகள், கல்லணை கால்வாய், அணைகள் புனரமைப்பு திட்டம் ஆகியவை அடக்கம்.
காலம் கடந்தாலும் ஒரு இன்றியமையாத நல்ல பணிக்கான ஒதுக்கீடு. இந்த தொலை நோக்கு கொண்ட அறிவிப்பு நீர் பற்றாக்குரைக்கு
அடிக்கும் சாவு மணியாக இருக்கு வேண்டும்.
ரூ. 1,002 கோடியில் சேலத்தில் கால்
நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் செயல்பாடு நம் தமிழகம் கால்நடை பராமரிப்பு துறையை
மேலும் வலுப்படுத்த எடுத்துக் கொள்ளும் ஓர் உண்ணத முயற்சியாகவே எனக்கு தெரிகின்றது.
ஊரகச்
சாலைகள் யாவையும் ரூ.1,400 கோடியில் மேம்படுத்தப் படும் என்னும் அறிக்கை யாவரையும்
மகிழ்ச்சியிலாழ்த்தும் என்பது நிச்சயம்.
ஸ்மார்ட் குடும்ப அட்டை உள்ளோர் எல்லா நியாய விலைக்
கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் விரைவில் செயல் படுத்தப் படும் என்னும்
அறிக்கை பாமர மக்களுக்கு ஒரு மிகவும் வேண்டிய தக்க வரப் பிரசாதமாக விளங்கும்.
அண்ணாமலை பல்கலை மருத்துவ கல்லூரியை
அரசே ஏற்று நடத்தும் என்ற அரசின் அறிக்கை ஆழ்ந்து கற்கும் மாணவர்களுக்கும் அவர்களுடைய
பெற்றோருக்கும் மகிழ்ச்சியளிக்கும்.
காவல் துறை மேம்பாட்டிற்காக ரூ. 8,876 கோடி அரசு
நிதி ஒதுக்கீடு மிகவும் அவசியமானது. மாநிலத்திற்காக ஓயாது உழைக்கும் காவலருக்கும் அவர்களது
குடும்பங்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். லேட்டாக வந்தாலும்
லேட்டஸ்டாக வருகின்றது.
நிதி நெருக்கடியிலிருந்து மீள, சென்னை பல்கலை கழகத்திற்கும்
அண்ணாமலை பல்கலை கழகத்திற்கும் தலா ரூ. 11.72 கோடியும் ரூ. 225.78 கோடியும் அரசு ஒதுக்கீடு
செய்திருக்கின்றது. இந்த 2020 பட்ஜெட் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கியிருப்பது
பார்பதற்கே ஆனந்தமாக இருக்கின்றது. ஏனெனில்
கல்விதான் நமது மாணவர்களின் வாழ்வாதாரமாகும்.
இப்போழுது நாம் பட்ஜெட்டின் மற்றொரு
பக்கத்தைப் பார்ப்போம்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மானியங்கள்
31 சதவிகிதம் குறைக்கப் பட்டுள்ளது. இதை
15 ஆவது நிதி குழு ஆழ்ந்து ஆராய்ந்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பது என் எண்ணம்.
இந்த நிதி நிலை அறிக்கையில் நிதி
பற்றாக்குறையை விட செலவு அர்ப்பணிப்பு அதிகமாக இருக்கின்றது. அதை பார்க்கும் பொழுது,
முன்னால் முதல் மந்திரி ஜெயலலிதா அவர்களின் நிதி பற்றாக்குறயை குறைக்கும் கனவானது இன்றும்
கனவாகனே இருக்கின்றது என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. இந்த நிதி பற்றாகுறை தொடர்ந்து எட்டு வருடங்களாக
ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல், முக்கியமாக வேலை வாய்ப்புத்
திட்டத்தின் கீழ் எந்த தெளிவான ஒதுக்கீடும் இல்லாதது மக்களின் குழ்ப்பத்தையும் அச்சத்தையும்
அதிகரிக்கின்றது. பொறுப்புடைமை என்பது ஒரு அரசின் நற்சான்றிதழாகும். அதை தக்க வைத்துக் கொள்வதும் அதே அரசின் கையில்தான்
இருக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக வர்த்தக குழுமங்களும் முன்னனி
வர்த்தகத் தலைவர்களும் வேறுபட்ட கருத்துக்களை பட்ஜெட்டை பற்றி முன் வைத்திருக்கின்றனர். இந்த பட்ஜெட் வெற்றியடைய ஒரே கருவி முழுக்க முழுக்க
தமிழக அரசின் அயராத உழைப்பும் ஒத்துழைப்பும்தான் என்பது நம் முன்னால் வருவாய் செயளாலர்
திரு. சிவராமன் அவர்களின் கணிப்பு.
மிகச் சிறிய, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கான கொள்கைகள்
மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் பணி 65 சதவிகிதம் தமிழக அரசின் உதவியை நம்பி இருக்கின்றன.
நம்பிக்கை வீண் போகாது என்று நம்புவோமாக.
“ இந்த பட்ஜெட் எப்பொழுதும் ஒரு வசப் படுத்த தக்க
புள்ளி விவரங்கள், வாக்குறுதிகள் மற்றும் எதிர்பார்ப்புகள் கொண்ட ஒரு அறிக்கையே தவிற,
இந்த மாநிலத்தின் எதிர்காலத்தை மாற்றும் என்று எனக்கு பெரிதாக எந்த நம்பிக்கையும் இல்லை
“ என்று ஆல் இந்தியா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் திரு. வெங்கடாச்சலம் கூறியிருக்கின்றார்.
பெரும்பாலான வல்லுனர்கள்
இதை ஒரு சாதரணமான பட்ஜெட்டாகவே பார்க்கின்றார்கள்.
நம் தமிழக அரசு இந்த பட்ஜெட்டின் மூலம் எல்லா முயற்சிகளையும்
களத்தில் இறக்கி அனைத்து தொழில் நிருவனங்களின் உற்பத்தியையும் மேம்படுத்த பாடு பட வேண்டும்.
பாடு படும் என்றும் தோன்றுகின்றது. ஏனினில்,
முந்தய ஆண்டில் காணாத ஒரு வேகத்தையும் உந்துதலையும் இந்த வருடத்தில் காண முடிகின்றது. அது மறு தேர்தலுக்காகவே கூட இருக்கலாம். இருந்து
விட்டு போகட்டுமே. நமக்கு நல்லது நடந்தால்
சரி.
தமிழக பட்ஜெட் மசூதிகளின்
வருடாந்திர பராமரிப்பு தொகையை ரூ. 60 லட்சத்திலிருந்து ரூ. 5 கோடிகளாகவும், மாதா கோவில்களை
பழுது பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் வழங்கும் தொகையை ரூ. 1 கோடியிலிருந்து ரூ.
5 கோடிகளாக உயர்த்தியது வரவேற்க தக்கதாக இருந்தாலும், இதே தாராளத்தை ஏன் இந்து கோவில்கள்
பக்கம் திருப்பவில்லை என்று யோசிக்கும்பொழுது, சிறிது வருத்தமாகத்தான் இருக்கின்றது.
நாம் ஒரு ஜனநாயக நாடு. தமிழக அரசே, ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும்
ஏன் ?
“ யாதும்
ஊரே, யாவரும் கேளீர் ” என்பதற்கேற்ப இந்து கோவில்களின் பராமரிப்பிற்கும் புனரமைப்பிற்கும்
தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் என்பது என் சொந்தக் கருத்தாகும்.
ஆயிரம்தான் கூறினாலும், எழுதினாலும் நம் தமிழக அரசு நன்றாகவே
செயல் படுகின்றது என்பது எனது ஆழ் மனக் கருத்தாகும். சிறிது பொருத்திருந்து பார்ப்போம். சில நற்செயல்களும் நற்செய்திகளும் வரலாம்.
இங்கு உங்கள் முன் வைக்கப் பட்டுள்ள கருத்துக்கள் யாவையும்
என் சொந்த கருத்துக்களேயாகும். பட்ஜெட்டை படித்து
நான் எவ்வாறு புரிந்து கொண்டேனோ அவ்விதமே இங்கு வடித்திருக்கின்றேன்.
Comments
Post a Comment